Sunday 19 February 2017

கருத்து வேறுபாடுகளோடு கைகோர்ப்போம்

ஒரு அழகான உறவு முறிய, அமைதியானக் குடும்பங்கள் பிரிய காலங்காலமாக மிகப் பெரிய காரணமாக இருப்பது கருத்து வேறுபாடுகள் தான். ஆனால் நாம் ஆழ்ந்து சிந்தித்தோமேயானால், கருத்து வேறுபாடுகளே மனிதனின் மிகப்பெரிய பலம். எந்த ஒரு உறவிலும், மிகவும் முக்கியமாக, அன்பின் உயிர் நிலையான காதலிலும், உயர் நிலையான வாழ்க்கைத்துணை ஒப்பந்தத்திலும் (திருமணம் என்பதைவிட பெரியார் சொன்ன "வாழ்க்கைத்துணை ஒப்பந்தம்எ" என்பதை என் பகுத்தறிவு எற்றுக்கொள்கிறது) கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், பகுத்தறிவு இதுதான்.ஆறறிவு படைத்த மனித இனத்தின் சக்தியே சிந்திப்பதுதான்.ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் பெற்றிருப்பதால், அவன் சிந்தனையும் தனித்துவம் கொண்டதுதான். ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் அனைத்து விஷயத்திலும் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.எந்த ஒரு விஷயத்திலும் வேறுபாடுகள் வருவதுதான் இயல்பு. அந்தக் கருத்து வேறுபாடுதான் மனித சிந்தனையின் அடையாளம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் சொல்லப்போனால், மாற்றி யோசிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்துணையாக வந்திருப்பதை விட, மிகவும் சிறந்த விஷயம் என்னவிருக்க முடியும். ஆனால், அந்த சிறந்த விஷயத்தை வாழ்க்கையின் சிறப்பிற்கும், வாழிய நலத்திற்கும், அளவில்லா ஆனந்தத்திற்கும் எப்படி அடித்தளமாகக் கையாள்வது அன்பது கண்வன் - மனையி யான இருவரின் உள்ளத்திலும்தான் உள்ளது. 

எகல் என்ற தத்துவ ஞானி , "ஒவ்வொரு கருத்தும் சூழ்நிலையும், தடையை மீறி அதனதன் எதிர் நிலையோடு இணைந்து ஓர் உயர்ந்த அல்லது மிகுந்த சிக்கல் வாய்ந்த முழுமையானதொரு பொருளாக வடிவம் பெறுகின்றன" என்ற அருமையானத் தத்துவத்தை முன்வைக்கிறார்.  

வாத முறைப்படி ஆய்ந்து உண்மை காணும் இயக்கமே எகலின் தத்துவத்திற்கு அடித்தளமாகும். ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத்துணைகளாக கைகோர்த்தப் பிறகு,  சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புக்கள், எடுக்க வேண்டிய முடிவுகள், தினசரி வாழ்க்கையில் ஆற்றும் பணிகள் என்று பல சூழ் நிலைகளில் கருத்து வேறுபாடுகள் முளைப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு. அதுவும், பாரதி கனவு கண்ட "புரட்சிப்பெண்" நனவாகி வரும், இந்தக் காலக்கட்டத்தில் அதுபோன்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உருவாகும். எப்பொழுதெல்லாம் இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் களை கட்டுகிறதோ, அப்பொழுதெல்லாம், அது செம்மையை நோக்கியப் பாதையின் அறிகுறி என்பதை மனதில் கொண்டு,  இருவரும், இருவேறு கருத்துக்களையும் பொறுமையாக உள்வாங்கி, நிதானமாக ஆராய்ந்து, பிறகு இருவரின் மனதிற்கும் ஒத்த, எல்லா வகையிலும் பயனளிக்கக்கூடிய முடிவை எடுத்தால் குடும்பத்தில்  மகிழ்ச்சி மட்டுமல்ல, செழிப்பும் பெருகும். அதற்கு முதற்படி, இருவருமே, தனது  கருத்துத் தான் எப்பொழுதும் நல்ல கருத்து, தன் முடிவு மட்டும் தான் பயனளிக்கும் என்ற கருத்தை தூக்கி எறிய வேண்டும். அப்படி ஒரு கொள்கை. மனிதனின் அடையாளமான பகுத்தறிவையேக் கேள்விக்குறி ஆக்கிவிடும். ஒரு மனிதனின் கருத்து தனது சிந்தனையின் வெளிப்பாடு. அவ்வளவுதான். கருத்துக்களை கருத்துக்களாக மட்டும் பார்க்க வேண்டும்.சரியானது , தவறானது என்று பிரிக்கக்கூடாது. இரண்டு கருத்துக்களையும் உள்வாங்கி சூழ்நிலைக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும், நல்ல முடிவு என்பதை விட, ஏற்ற முடிவு எடுப்பதுதான் மனிதனின் பகுத்தறிவு,  ஆனந்தமான வாழ்க்கைக்குக் காட்டும் வழியாகும்.

No comments:

Post a Comment