Monday 27 February 2017

கனவு நிழற்படம்


கனவு -  ஒரு அட்டகாசமானப் பயணம் அது. எந்த ஒரு உந்துதலும் இல்லாமல் ஆரம்பித்து, தானாகவே முடியும் ஒரு வித்தியாசமானப் பயணம். எங்கே போகிறோம்? எதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டோம்? யாரோடு நாம் பயணிக்கிறோம்? அவர்களுக்கும் நமக்கும் என்ன உறவு? என்ற பல கேள்விகளுக்கும் பதில்களில்லாத பயணம் அது. இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, என் தலையில் ஒரு கொட்டு விழுவதை உணர்ந்தேன். உளவியல் தந்தையான, ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த சிக்மண்ட் ஃப்ராய்ட் (SIGMNUND FREUD) என்னை மிகவும் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் மேலே கேட்ட கேள்விகளெல்லாம், அவரின் முப்பது ஆண்டு உளவியல் ஆராய்ச்சியையேக் கேள்விக்குறியாக்கிவிட்டது என்பது போல் ஒரு கோப எரிமலை அவர் கண்ணில் காணமுடிந்தது. நியாயம்தான். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உடல்நோயை மனிதகுலம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் மனநோயை ஏற்றுக்கொள்ள சமுதாயம் மறுத்தது. மன நோய், ஒரு சமூக அவலமாகவே பார்க்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக, அவர்கள் சாத்தான்களின் படைப்புகளாகக் கூறி தீண்டத்தகாதவர்களாக்கினர். 19-ஆம் நூற்றாண்டில், மன நோயும் உடல் நோயைப்போல் தீர்க்கக்கூடியதுதான், சாமியாடுவது, பரவச நிலைக்குப்போவது , அசாதரண செயல்கள் செய்வது அனைத்திற்கும் மனம்தான் காரணம், என்ற பகுத்தறிவை அறிவியல் ஆராய்ச்சி மூலமாக ஊட்டி, பலபேரின் புருவங்களை உயர்த்தச் செய்தவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.
மனம் ஒரு தண்ணீரில் மிதக்கும் பனிக்கட்டிப்போன்றது. கண்களுக்குத் தெரிவது, அதில் ஏழில் ஒரு பங்குதான்
என்ற அற்புதமான கருத்தின் மூலம், நம் மனதின் ஆழத்தன்மையை விளக்குகிறார். ஆழ்மனதைப்பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட அவர், கனவுகளின் விளக்கம் (INTERPRETATION OF DREAMS)” ன்ற மிகச்சிறந்த புத்தகத்தொகுப்பை வெளியிட்டார்.
கனவுகளின் விளக்கம்தான் ஆழ்மனதில் நுழைவாயில் (INTERPRETATION OF DREAMS IS THE ROYAL ROAD TO THE UNCONSCIOUS MIND)” 
என்று துணிந்து சொன்ன அவர், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், அவர் முன்மொழிந்த “சைகோ அனலிடிக் தியரி (PSYCHOANALYTIC THEORY)” மூலமாக பல மன நோயாளிகளை, அவர்களின் கனவுகளின் விளக்கங்களின் மூலம், அவர்களின் கடந்தகால அனுபவங்களை உணர்ந்து, அதனால் ஏற்பட்டக் காயங்களையும், தழும்புகளையும் அகற்றி, மனப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகொடுத்தார். அவரின் ஆராய்ச்சிகளைப் தீவிரமாக அலசினால், கனவுப் பயணத்தின் ஆதியும் நாமே, அந்தமும் நாமே என்பதை நம் பகுத்தறிவு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும். நாம் என்ன நினைத்தாலும், அதை செய்ய முடியாத ஒரு சமுதாயக் கட்டமைப்பில், கனவு ஒரு திறந்தவெளி மேடை.கண்காணிக்க யாருமேயில்லாத விளையாட்டுத்திடல்.. சரி, தவறு என்ற விதிகள் இல்லாத சமுதாயக்கூடம். நாம் உண்மையில் யாரென்று அறிந்துகொள்ள நம் கனவைப்பார்த்தால் தெரிந்துவிடும். இந்த யோசனையெல்லாம், என் மனதில் போய்க்கொண்டிருக்க, அந்த மேதறிஞர் ஃப்ராய்ட் அவர்களின் கோபத்தைக் குறைக்க, ஒரு அருமையான செய்தி சொன்னேன். சொன்னதும், புன்னகை அவர் முகத்தை அலங்கரித்தது. வெண்தாடி சிரித்தது. மனதைப்பற்றி கண்டிறாத ரகசியங்களைக் கண்டறிய இன்னுமொரு முழுவாழ்க்கை  கிடைத்த ஒரு ஆனந்தம் ஊஞ்சலாடியது. “இது சாத்தியம்தானா..?” என்று கொஞ்சம் சந்தேகத்துடன் கேட்டார். அறிவியல் என்றுதான் வார்த்தைகளிலும், உணர்வுகளிலும் மயங்கியுள்ளது...? காரணத்தில்தானே உயிர்வாழ்கிறது. நான் ஒரு சிறிய உறையைக்கொடுத்து , “இதைப் பாருங்கள்” என்றேன். “24-02-2027” என்று உறையின் மேல் எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு, மிகுந்த ஆர்வத்துடன், உள்ளிருப்பதைப் பார்த்தார். ஆச்சரியம் அவர் கண்களை மிரட்டியது. நான் சொன்னேன், “உண்மைதான்…இது கனவில் எடுத்த நிழற்படங்கள்..இனி நீங்கள் நாட்கள் கணக்காக, மாதங்கள் கணக்காக கனவில் பார்த்ததைப்பற்றியும், நடந்ததைப் பற்றியும், உருவங்கள் பற்றியும் அறிந்துகொள்ள செலவு செய்ய வேண்டாம். நோயாளிகளின் பிரச்சனைகளை மிக விரைவில் தீர்க்கமுடியும்”. வாயடைத்துப்போனார் அவர்.

ஏன் முடியாது..? நம் கண்கள் 576 மெகாபிக்ஸல் கேமராவைப் போன்றது. நாம் தெளிவு நிலையிலும் (CONSCIOUS STATE), ஆழ்ந்த மயக்க நிலையிலும் (SUB-CONSCIOUS STATE) பார்க்கும் ஒவ்வொரு படமும், நம் மூலைக்குள், ஏதோ ஒரு ஓரத்தில் பதிவாகியுள்ளது. நம் மூலையின் தூதுவர்களான, நியூரோ-ட்ரான்ஸ்மிட்டர்ஸ் (NEURO-TRANAMITTERS) துணையோடு, அனைத்து பதிவுகளையும், நிழற்படம்போல் பதிவிறக்கம் செய்யும் கருவிதான் இது என்று அந்தக் கருவியைக் காட்டினேன்.அடுத்த புரட்சி மனதின் இன்னும் பல இரகசியங்களைச் சொல்லக் காத்திருக்கிறது என்ற புன்முறுவலோடு என்னைக் கட்டியணைத்தார் அவர்.

1 comment:

  1. Super.. I loved the concept of taking photograph of our dreams

    ReplyDelete