Friday 24 July 2015

Destination 3 - என் நண்பனுக்கு கல்யாணம்..


      மணி 11:45…அய்யயோ…  ட்ரைன் வர நேரமாச்சே… எல்லா வேலையையும் விட்டுட்டு டக்குன்னு கெளம்பிட்டேன்… பின்ன, சிவா, கல்யாணமாகி புது மாப்பிள்ளையா  வரான்ல…..எல்லா வேலையையும் விட இதாங்க முக்கியம்….. நட்ப விட என்னாங்க பெரிய வேலை...? ஆமாங்க..சிவா, என்னோட நீ…………..ண்ட கால நண்பன்.. ஆறாவதுலிருந்து  
ஒண்ணா படிச்சிருக்கோம்..12-வது முடிச்சிட்டு ஒண்ணா ராணுவப் பயிற்சியில மூணு வருஷம் இருந்தோம்….. பயிற்சி முடிஞ்சபிறகு ஒரே மேற்படிப்புக்கு ஆப்ட் பண்ணோம்….எங்க லக் பாருங்க, 67 பேரு இருந்த கிளாஸ்ல 5 பேரு செலெக்ட் பண்ணாங்க…..அதுல பாத்தா, எங்க ரெண்டு

பேரோட பேரும் இருந்துச்சு..எல்லாத்துக்கும் ஒரே ஆச்சரியம்… ஆச்ச்ரியத்தோட பொறாமை....இயற்கையே சில நட்பை ஆசிர்வதிக்கும்…ஆராதனை பண்ணும்…..அது மாதிரிதான் எங்க நட்பும்…….கதை இங்க முடியலங்க...… அந்த மூணு வருஷம் மேற்படிப்பு முடிச்ச கையோட வந்த  அடுத்த வேலையும் ஒரே இடத்துல……சத்தியமா , நம்பவே முடியலைங்க…இப்பதான் சின்ன பையனா பழகிட்டிருந்தோம்…..எத்தனை சண்டைகள் , எத்தனை சமாதானங்கள் , எத்தனை சாதனைகள் , எத்தனை கொண்டாட்டங்கள்…..அதுக்குள்ள கல்யாணமாகி மனைவியோட வந்து நிக்கப்போறான். காலம் பயங்கர ஸ்பீடா போயிருச்சு..…கண்ண சிமிட்றதுக்குள்ள  வயசு எங்கயோ போய் நிக்குது…….எதை எதையோ மனுஷன் கண்டுபுடிக்கிறான்..இந்த காலத்தை நிறுத்த ஒரு வழி கண்டுபுடிக்க முடியாதா..?ஒரு பக்கத்துல அவனோட வாழ்க்கை முன்னேற்றத்தைப் பார்த்தும் , அவனுக்கு நடக்குற நல்ல விஷயங்களைப் பார்த்து  சந்தோஷமா இருந்தாலும் , இன்னோரு பக்கத்துல மனசு வலிக்குதுங்க…..என்னோட நண்பனா இருந்தவன் , இப்போ "கணவன்" ங்கற ஒரு புது பொறுப்போட இறங்குவான்...அந்த வசந்த காலம் ”  இனிமேலும் வருமான்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு….. அவனோட வெற்றிய கொண்டாட நண்பர்கள் மட்டும் திட்டம் போடும் சுதந்திரம் பறிபோனமாதிரி ஒரு உணர்வு….திடீர்னு ப்ளான் பண்ணி , போரடிக்குதுன்னு நைட் ரெண்டு மணிக்கு கார்ல ட்ரைவ் போக முடியாதே.....இனிமேல் நெனைச்ச நேரத்துல எப்ப வேணாலும், “ டே மச்சான்.. மனசு கஷ்டமா இருக்கு..வெளிய போலாமா..?” ன்னு கூப்பிட முடியாது…..ஞாயித்துக்கிழமைத "பேச்சலர் திட்டத்துல" அவன் பேர இனிமேல் சேக்க முடியாது…சரி விடுங்க…இப்படியே லிஸ்ட் பெருசா போகும்…இந்த மனசிருக்கே மனசு , கஷ்டப்பட முத ஆளா நிக்கும்……. நம்ம தான் மனசுக்கு சந்தோஷமா இருக்க கத்துகொடுக்கணும்...இந்த விஷயத்துலயே பாருங்க...உண்மையா சொல்லப்போனா , அவனோட வெற்றிய இன்னும் சிறப்பா கொண்டாட ஒருத்தவங்க வந்திருக்காங்க…..சந்தோஷத்த பகிர்ந்துகிட்டா சந்தோஷம் குட்டி போட்டு குட்டி போட்டு இன்னும் நிறைய சந்தோஷந்தான் கொடுக்கும்……சந்தோஷம் அதிகமானா ஆனந்தம்தானே…என் மனசுக்கு சின்னக் குழந்தைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொன்னேன்.....”ரயில்வே ஸ்டேஷன்” வந்திருச்சுன்னு கண்டக்டர் சொன்னதும்தான் நினைவுக்கே வந்தேன்…. நான் ரெடி ஆகிட்டென்..என் நண்பன “அவன் குடும்பத்தோட” வரவேற்க..ஒத்தையா போனவன் ஜோடியா வராண்டா...……..அவனுக்கு எல்லா உதவி செய்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்……நண்பேன்டா……!!!வாடா..வா....

Monday 20 July 2015

Destination 2 - மனிதன் என்ற அதிசயம்...

          இந்த  உலகத்திலேயே  சக்தியுள்ள  உயிர்  யாருங்க ? கடவுளா ? கடவுளுக்கு உயிர் இருக்கா இல்ல வெறும் கல்லுதான்னான்னு எனக்குத் தெரியாது..?  ஆனா ஒண்ணு  மட்டும் சொல்ல முடியும்..ஒரு மனுசனுக்குள்ள இருக்குற சக்தி யாருக்குமே கிடையாது.....நம்மால செய்ய முடியாததுன்னு  இந்த உலகத்துல எதுவுமே இல்ல...நம்ம நினைக்கிறது இல்ல...                    "EVERYTHING IS MENTAL"....அவ்வளவு தான்...இந்த உலகத்தை உலகமா பார்க்க கத்துகொடுத்ததே மனுசன் தான்...இந்த உலகத்துல பஞ்ச பூதங்களையும் உணர்ந்தது மனுசன் தான்.....நிலத்தை நிலமா மட்டும் பார்க்காம அதை "பொறுமையின் பூமாதேவியா" பார்த்தது மனுசன்  தான் ; "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல..." என்று சொன்ன திருவள்ளுவர் தாத்தா மனுசன் தான்..ச்சே..அவர் கூட ஒரு நாள் முழுசும் பேசனும்னு எனக்கு ரொம்ப ஆசை..நிறைய கேள்விகள் இருக்கு....சரி..டாபிக் வருவோம்....."நீர்" -  கடலா மட்டும் பாக்காம , மனசோட ஆழமா  ஒப்பிட்டு சொன்னது  மனுசன் தான் ; "காற்று" -  உயிர்வாழ அவசியமானது என்ற உண்மையை மட்டுமில்லாம , காற்று கற்றுகொடுக்கும் சங்கீதத்தையும் கண்டுபுடிச்சது மனுசன் தான் ; ஆகாயம் - அளவிடமுடியாத எல்லையைக் கொண்டது என்பதை மட்டுமில்லாமல் அன்பின் அளவுகோளாக ஆகாயத்தின் அளவற்றத் தன்மையைச் சுட்டிகாட்டியது மனுசன் தான் ;  "நெருப்பு"  - வெப்பத்தின் பிறப்பிடம் என்ற உண்மைய கண்டுபுடிச்சதோட மட்டுமில்லாம , அதை எப்படி உருவாக்கணும் என்ற அதிசயத்த  சொன்னது மனுசன் தான்.....மனுசன் செய்யாதது என்ன இருக்கு..? அறிவியலை ஆராய்ச்சி பண்ணது மனுசன் தான். ஆண்மீகத்தை அறிமுகப்படுத்தியதும் மனுசன் தான்....கல்ல சிலையாக்குனதும் மனுசன் தான்......சிலைகளுக்கு உயிர் கொடுத்ததும் மனுசன் தான்....மனுசன மனுசாக்குற கல்வியைக் கொடுத்ததும் மனுசன் தான்...மனச தெய்வமாக்குற காதல் கொடுத்ததும் மனுசன் தான்.....மனுசனும் மனுசனும் பேசிக்க மொழி கொடுத்ததும் மனுசன் தான்...எந்த மொழியாலயும் வர்ணிக்க முடியாத சில உண்ர்வுகள உள்ளக்குரல்களையும் உலகத்துக்கு எடுத்துச் சொன்னது  மனுசன் தான்....மனுசனுக்கு மேல கடவுள்னு சொன்னதும் மனுசன் தான்......மனுசன மனுசனா மதிக்கிற மனுசன் மட்டும் தான் கடவுள்னு சொன்னதும் மனுசன் தான்....பக்திய போதிச்சதும் மனுசன் தான்...பகுத்தறிவ பரைசாற்றியதும் மனுசன் தான்.....இன்னும் சொல்லிட்டெ போகலாம்....அந்த மனுசன பொறந்த நம்மளுக்கு " மனுசன்" , அப்படிங்க்ற கர்வம் வேணும்......இந்த பூமியில இருக்குற எல்லாருமே நம்ம சொந்தம் தான்.....மனுசன் கண்டிப்பா இந்த பூமியில பிறந்த ஒரு அதிசயம் தான்...அதனால் மனுசன மனுசன் தான் மதிக்கணும்; மனுசன மனுசன் தான் காப்பாத்தணும்.....165 கோடி செலவு பண்ணி  "புஷ்கரம்" பண்டிகையைக் கொண்டாடுறதுக்கு பதிலா  10க்கும் மேற்பட்ட கிராமத்த தத்தெடுத்திருந்தா அங்க எத்தனையோ  "புன்னகைப் பூக்கள்" பூத்திருக்கும்...எத்தனையோ பண்டிகைகளும் , கொண்டாட்டங்களும் நடந்திருக்கும்..எத்த்னையோ மனுசங்க உருவாகியிருப்பாங்க.......நம்ம பக்கத்துல , நம்ம கண்ணுக்கு முன்னாடி யாராவுது பசியா இருக்காங்கன்னா அதுக்கு  நம்மளும் காரணம் தான்..நம்ம நினைச்சா அந்த பசிய போக்கலாம்...நம்ம நினைச்சா எந்தப் புரட்சியையும் கொண்டுவரலாம்...."EVERYTHING IS MENTAL" - என்னோட பயிற்சி காலத்துல என் மனசுல பதிக்கப்பட்ட முதல் வாழ்க்கை மந்திரம்....மனுசன் நினைச்சா அதிசயம் லாம் அசால்டா நடக்கும்...ஆனா, நினைக்கதான் மாட்டோம்...ஆனா ஒண்ணுங்க, நினைக்கலைன்னா , மனுசனே இல்ல....  நம்மனால "ஆக்கவும் முடியும் , காக்கவும் முடியும் , அழிக்கவும் முடியும் "...ஆஹா..அப்படின்னா   "நாம் கடவுள்" உண்மையா...? உண்மைதான்.......மனுசனா இருந்து அதிசயம் செய்ய நினைங்க.....

Sunday 19 July 2015

Destination 1 - மறதி ஒரு வரம்...

           ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவத்த கொடுத்துட்டுதான் இருக்குது.. அது நல்ல அனுபவமாவும் இருக்கலாம்.. ஒரு கசப்பான அனுபவமாவும் இருக்கலாம்...அந்த அனுபவத்த  நம்ம சுத்தியிருக்குற யாரு வேணும்னாலும் கொடுத்திருக்கலாம்...அது அம்மா - அப்பா வா இருக்கலாம் ; அண்ணன்- தம்பி-அக்கா-தங்கச்சி என்ற உடன்பிறப்புக்களாவும் இருக்கலாம்;  மனைவியா இருக்கலாம்; பெற்ற பிள்ளைகளாக இருக்கலாம்;  நாம நேசிக்கும் நெஞ்சமாவும் இருக்கலாம்; ஆருயிர் நண்பனாவும் இருக்கலாம் ; ஆசிரியரா இருக்கலாம்; அலுவலகத்தின் உயர் அதிகாரியாக இருக்கலாம்;  இல்ல நமக்கு கீழ வேலை பார்க்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம்... நல்ல அனுபவத்த கொடுத்த எந்த மனசையும் மனசார பாராட்டாம விட்றாதீங்க...அதுவும் , எல்லாத்துக்கும் தெரியிர மாதிரி பாராட்டுங்க..."பாராட்டு" மனசுக்கு கிடைக்குற அங்கீகாரம்னு சொல்வாங்க..நல்லவுங்க நல்லவுங்களாவே இருக்கவும் , இன்னும்  நிறைய நல்ல மனசுள்ள மனிதர்கள்  உருவாகவும் , நீங்க பாராட்டுற அந்த அஞ்சு நிமிசம் கண்டிப்பா உதவும்..அதே உங்கள  புண்படுத்தியோ , நெஞ்சை கசக்கி புழியிற மாதிரி வார்த்தைகள பேசியோ , உங்களோட தன்னம்பிக்கையை அடிமட்டத்துக்கு கொண்டுபோய் , உங்களையே நீங்க வெறுக்குற மாதிரி நடந்துக்குற யாராக இருந்தாலும் , நான் சொல்ற ரெண்டு விசயத்த கடைபிடிச்சு பாருங்க...ஒன்று , அந்த மாதிரி நிமிடங்கள் வரப்போவுதுன்னு மனசு சொல்லும் போது , டக்குன்னு , " மௌனம் விரதம் " எடுத்துறங்க..உங்க உணர்ச்சி கொந்தளிக்கும் போதும் மௌனமாவே இருங்க.. மௌனம் சத்தத்தை விட மிக வலிமையானது...சக்தியுள்ளது...அந்த நிமிசங்கள போக விடுங்க.....அப்புறம் , தனியாக போய் , யோசித்து பாருங்க , யாருக்குத் தெரியும் , நீங்க பண்ணதே தப்புனு தோணலாம்..இல்ல நீங்க சரிதான்னும் தோணலாம்...தப்புனு பட்டுச்சுன்னா, உடனே போய் , மன்னிப்பு கேளுங்க.."மன்னிப்பு கேக்குறவந்தான் மனுசன்"...ஏனா ஆடு மாடுக்கெள்ளாம் மன்னிப்பு கேட்க தெரியாது.. அதே உங்க மேல தப்பு இல்லனு பட்டுச்சுன்னா , யாரு சொன்னாங்களோ , அவுங்கட்ட போய் அன்பா சொல்லிடுங்க , " நான் என் மனசாட்சிக்கு விரோதமா எதுவுமே செய்யல...நீங்க பேசுனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..மனசு வலிக்குது..."  இத மட்டும் சொல்லிட்டு , வந்திடுங்க...அப்படியே மறந்துடுங்க...மன்னிச்சிடுங்க; ஸோ, நீங்க   இரண்டாவதா நீங்க கடைபிடிக்க வேண்டியது , "  நேற்றய இரவு   நேற்றே போச்சு...இன்றைய விடியல் நம்பிக்கையாச்சு " ........0.0001% கூட   என்ன நடந்ததோ அத நெனப்புல வச்சுக்கக் கூடாது...வேரோட அந்த நிமிடங்கள கிள்ளி வெளிய தூக்கி குப்பதொட்டியில போட்டுடுங்க..ஆமா..அது குப்பைதான்...குப்பைகளை சேத்தா நம்ம மனசு  அழுக்காயிடும்...நாற்றமடிக்கும்...    நான் எப்பயோ ஆரம்பிச்சுட்டேன்.... அந்த ரெண்டு விசயத்தையும் கடைபிடிக்க ....எவ்வளவு ஆனந்தமா இருக்கு தெரியுமா வாழ்க்கை...யாரையுமே என்னால வெறுக்க முடியல.. ஒவ்வொரு நாளும் புதுசா ஆரம்பிக்கும் ஃபீலே தனி......அப்பதான் புரிஞ்சுகிட்டேன்...மறதி ஒரு பெரிய வரம்னு...

Friday 17 July 2015

எழுத்து வண்டி தயார்...

                                         எழுத்துக்களுக்கு கண்டிப்பாக இன்னும் மகாசக்தி இருக்குன்னு நான் முழுசா நம்பறேன்...மனச படம்பிடிச்சு கண்ணாடி மாதிரி காட்டும் எழுத்துக்கள் ஒரு தனி மனிதனிடம் மட்டுமல்ல ஒரு சமுதாயத்திலேயே  ஒரு பெரிய புரட்சிய கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமில்ல... அதனாலதான்  நான் என் மனச எழுத்துக்கள் வசமாக்கி , எழுத்த என் வசமாக்கி , என் மனச உங்க வசமாக்க,  இந்த எழுத்து வண்டிய எடுத்துகிட்டு  புறப்பட்டிருக்கேன்......இந்த எழுத்து வண்டி எல்லா ஸ்டாப்லையும் நிக்கும்...எவ்வளவு  பேர் வந்தாலும் ஏத்திகிட்டு போக இந்த வண்டியில "தம்" இருக்கு......வண்டியோட கடைசி   நிறுத்தம் தெளிவா இருக்கிறதனால , போகும் பாதை ரொம்ப சுலபமா  கெடைச்சிடும்னு எனக்கு ,  நான் படிச்ச பள்ளியில சொல்ல மட்டும் செய்யாம , செஞ்சும் காமிச்சிருக்காங்க..... என் மனச தொட்ட ஒவ்வொரு" நிறுத்தங்கள் " லையும்  இந்த எழுத்து வண்டிய நிப்பாட்டுவேன்....அந்த நிறுத்தம் ஒவ்வொரு நாளும் வரலாம் , ரெண்டு   நாளைக்கு ஒரு முறையும் வரலாம் , ஒரே நாள்ல ரெண்டு முறையும் வரலாம்...யாரு வேணும்னாலும் எந்த நிறுத்தத்துலையும் ஏறலாம் ; எங்க வேணாலும் எறங்கலாம்.....வண்டியில போகும்போது ஒவ்வொரு பயணியும் முழு சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம்.....இந்த வண்டி தூய "தமிழ்" லையும் ஓடும் , பயணிகளோட சௌகரியத்துக்காக நம்ம " நட்பு தமிழ்" லையும் ஓடும்...ஆங்கிலத்திலையும் ஓடும்....தமிழ் கலந்த ஆங்கிலத்திலையும் ஓடும்...ஆனா..ஓடும்..ஓடும்..ஓடிகிட்டே இருக்கும்...யாருக்கு தெரியும் , ஒரு வேல இந்த வண்டியில ஒரு நாள் இந்த மனித சமுதாயமே வந்து உட்கார்ந்துட்டாங்கன்னா..? 

ஆமங்க,

" சின்னதா யோசிக்கிறது தெய்வக் குத்தம்னு "  எங்க  அம்மா அப்பா  சொல்லிருக்காங்க....நீங்க வேணாலும் கேட்டு பாருங்க....உங்க அம்மா அப்பாவும் சொல்வாங்க...

"கனவு காண்பது நம் உரிமை..அதைப் மிக மிக மிகப் பெரிதாகக் காண்பது நாம் மனித இனத்திற்கே செய்யும் கடமை..."


சரி..ரைட்..ரைட்..போலாம்..போலாம்.....