Saturday 1 August 2015

நிறுத்தம் 4 - கலாம் தாத்தா.....உங்களைப் பார்க்கணுமே.... - (1)


      என் கனவுத் தாத்தாவே,

                
                         எங்கு சென்றீர்கள்..? ஓய்வு  பெற்றுவிட்டீர்களா..வாழ்க்கையிலிருந்து? கண்டிப்பாக இருக்கமுடியாது.....இயற்கை அப்படியொரு  விருப்பத்தை உங்களிடம் கேட்டிருந்தால் , நீங்கள்  கண்டிப்பாக ஒய்வுபெற மறுத்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்..... நீங்கள் திடீரென்று என்னை விட்டுச்சென்றதற்கு காரணம்  தேடி அலைந்த என் ய்மனதிற்கு , பழைய நினைவலைகள் விடையைக் கொடுத்தது....

"புரட்சி என்பது உன்னைப்போன்ற மாணவர்கள் கையில்தான் இருக்கிறது...மாணவன் கனவு கண்டால் எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது..." 

என்று நீங்கள் சொன்னதை நிரூபிக்க உங்கள் அன்புக்கட்டளையாகத்தான் என்னைத் தவிக்கவிட்டு நீங்கள் சென்றதின் நோக்கமாக நினைக்கின்றேன்...உலகம்  பாராட்டிய அறிவுச்செம்மலை, நம் தாய்த்திரு நாடே காதலித்த இரும்புமனிதரை , என்னைப் பெற்றெடுத்த என் தமிழ்மண்ணின் மைந்தன் என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் நரம்புகளில் " சங்கே முழங்கு " என்ற தமிழ்ச்சத்தம் கர்ஜிக்கிறது.....வறுமையின் நிறத்தை மாற்றவும் , கல்வியின் கரத்தை இறுக்கமாகப் பிடிக்கவும் , நீங்கள் செய்தித்தாள் விற்று 
"நேற்றய இந்தியா" அனைவரின் வீட்டிலின் வாசலிலும்  சேர்க்க முயன்றதை நினைத்து நெஞ்சம் நிமிர்கிறேன்...வறுமையிலும் எவ்வளவு செழுமை...... ராமநாதபுரம் ஸ்வர்ட்ச் பள்ளி , திருச்சி செயின்ட் ஜோசஃப்  கல்லூரி ,  எம்.ஐ.டி ( மெட்ராஸ் தொழில் நுட்ப நிலையம் )  என்று உங்களின் அறிவைத் தாலாட்டி , சீராட்டி , எழுச்சிக்கல்வி கொடுத்து உங்களை ஒரு "அறிவுச் சிற்பமாக" செதுக்கிய  கல்விக்கூடங்களை  "அறிவுச்சிற்பக்கூடமாகத்தான்" என் மனது ஏற்கிறது....அதோடு மட்டுமல்லாமல் ,  என் வாழ்க்கையில் வாழ வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த மூன்று இடங்களும் கண்டிப்பாக உண்டு..பார்க்க வேண்டிய இடங்கள் அல்ல , வாழ வேண்டிய இடங்கள்....ஆம்...நீங்கள் உட்கார்ந்த வகுப்பறை , நீங்கள் தங்கிய அறை, நீங்கள் உணவருந்திய இடங்கள் ,  உங்களிடம் பேசிப்பழகிய பாக்கியவான்கள் , உங்கள் காலடி பெற்று "அறிவெழுச்சி" பெற்ற ஓர் இடம் விடாமல் , உங்களிடம் சம்பந்தப்பட்ட அனைத்திலும் என் உடம்பும் ,  உள்ளமும் , மனமும் , அறிவும் ஒன்றாகக்கலந்து  அந்தக் கல்விக்காற்றைப் பெற வேண்டும் என்பதே என் உடம்பை இயக்கும்  ஒவ்வொரு அணுக்களும் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணம்  என்பதில் நான் பெருமைப்படுகிறேன்....உங்களுக்கு நான் எழுதும் இந்தக் கடிதத்தில் நீங்கள் என்னைப் பிரிந்த மன வலியோடு சேர்த்து , நீங்கள் புகட்டிய மன வலிமையோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்தை உங்களோடு பயணிக்க விரும்புகிறேன்....உங்களுக்கும் பயணம் என்றால் மிகவும் பிடிக்குமல்லவா..? 

No comments:

Post a Comment