Monday 27 February 2017

கனவு நிழற்படம்


கனவு -  ஒரு அட்டகாசமானப் பயணம் அது. எந்த ஒரு உந்துதலும் இல்லாமல் ஆரம்பித்து, தானாகவே முடியும் ஒரு வித்தியாசமானப் பயணம். எங்கே போகிறோம்? எதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டோம்? யாரோடு நாம் பயணிக்கிறோம்? அவர்களுக்கும் நமக்கும் என்ன உறவு? என்ற பல கேள்விகளுக்கும் பதில்களில்லாத பயணம் அது. இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, என் தலையில் ஒரு கொட்டு விழுவதை உணர்ந்தேன். உளவியல் தந்தையான, ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த சிக்மண்ட் ஃப்ராய்ட் (SIGMNUND FREUD) என்னை மிகவும் கூர்மையாகப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் மேலே கேட்ட கேள்விகளெல்லாம், அவரின் முப்பது ஆண்டு உளவியல் ஆராய்ச்சியையேக் கேள்விக்குறியாக்கிவிட்டது என்பது போல் ஒரு கோப எரிமலை அவர் கண்ணில் காணமுடிந்தது. நியாயம்தான். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உடல்நோயை மனிதகுலம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் மனநோயை ஏற்றுக்கொள்ள சமுதாயம் மறுத்தது. மன நோய், ஒரு சமூக அவலமாகவே பார்க்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக, அவர்கள் சாத்தான்களின் படைப்புகளாகக் கூறி தீண்டத்தகாதவர்களாக்கினர். 19-ஆம் நூற்றாண்டில், மன நோயும் உடல் நோயைப்போல் தீர்க்கக்கூடியதுதான், சாமியாடுவது, பரவச நிலைக்குப்போவது , அசாதரண செயல்கள் செய்வது அனைத்திற்கும் மனம்தான் காரணம், என்ற பகுத்தறிவை அறிவியல் ஆராய்ச்சி மூலமாக ஊட்டி, பலபேரின் புருவங்களை உயர்த்தச் செய்தவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.
மனம் ஒரு தண்ணீரில் மிதக்கும் பனிக்கட்டிப்போன்றது. கண்களுக்குத் தெரிவது, அதில் ஏழில் ஒரு பங்குதான்
என்ற அற்புதமான கருத்தின் மூலம், நம் மனதின் ஆழத்தன்மையை விளக்குகிறார். ஆழ்மனதைப்பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட அவர், கனவுகளின் விளக்கம் (INTERPRETATION OF DREAMS)” ன்ற மிகச்சிறந்த புத்தகத்தொகுப்பை வெளியிட்டார்.
கனவுகளின் விளக்கம்தான் ஆழ்மனதில் நுழைவாயில் (INTERPRETATION OF DREAMS IS THE ROYAL ROAD TO THE UNCONSCIOUS MIND)” 
என்று துணிந்து சொன்ன அவர், பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், அவர் முன்மொழிந்த “சைகோ அனலிடிக் தியரி (PSYCHOANALYTIC THEORY)” மூலமாக பல மன நோயாளிகளை, அவர்களின் கனவுகளின் விளக்கங்களின் மூலம், அவர்களின் கடந்தகால அனுபவங்களை உணர்ந்து, அதனால் ஏற்பட்டக் காயங்களையும், தழும்புகளையும் அகற்றி, மனப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகொடுத்தார். அவரின் ஆராய்ச்சிகளைப் தீவிரமாக அலசினால், கனவுப் பயணத்தின் ஆதியும் நாமே, அந்தமும் நாமே என்பதை நம் பகுத்தறிவு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும். நாம் என்ன நினைத்தாலும், அதை செய்ய முடியாத ஒரு சமுதாயக் கட்டமைப்பில், கனவு ஒரு திறந்தவெளி மேடை.கண்காணிக்க யாருமேயில்லாத விளையாட்டுத்திடல்.. சரி, தவறு என்ற விதிகள் இல்லாத சமுதாயக்கூடம். நாம் உண்மையில் யாரென்று அறிந்துகொள்ள நம் கனவைப்பார்த்தால் தெரிந்துவிடும். இந்த யோசனையெல்லாம், என் மனதில் போய்க்கொண்டிருக்க, அந்த மேதறிஞர் ஃப்ராய்ட் அவர்களின் கோபத்தைக் குறைக்க, ஒரு அருமையான செய்தி சொன்னேன். சொன்னதும், புன்னகை அவர் முகத்தை அலங்கரித்தது. வெண்தாடி சிரித்தது. மனதைப்பற்றி கண்டிறாத ரகசியங்களைக் கண்டறிய இன்னுமொரு முழுவாழ்க்கை  கிடைத்த ஒரு ஆனந்தம் ஊஞ்சலாடியது. “இது சாத்தியம்தானா..?” என்று கொஞ்சம் சந்தேகத்துடன் கேட்டார். அறிவியல் என்றுதான் வார்த்தைகளிலும், உணர்வுகளிலும் மயங்கியுள்ளது...? காரணத்தில்தானே உயிர்வாழ்கிறது. நான் ஒரு சிறிய உறையைக்கொடுத்து , “இதைப் பாருங்கள்” என்றேன். “24-02-2027” என்று உறையின் மேல் எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு, மிகுந்த ஆர்வத்துடன், உள்ளிருப்பதைப் பார்த்தார். ஆச்சரியம் அவர் கண்களை மிரட்டியது. நான் சொன்னேன், “உண்மைதான்…இது கனவில் எடுத்த நிழற்படங்கள்..இனி நீங்கள் நாட்கள் கணக்காக, மாதங்கள் கணக்காக கனவில் பார்த்ததைப்பற்றியும், நடந்ததைப் பற்றியும், உருவங்கள் பற்றியும் அறிந்துகொள்ள செலவு செய்ய வேண்டாம். நோயாளிகளின் பிரச்சனைகளை மிக விரைவில் தீர்க்கமுடியும்”. வாயடைத்துப்போனார் அவர்.

ஏன் முடியாது..? நம் கண்கள் 576 மெகாபிக்ஸல் கேமராவைப் போன்றது. நாம் தெளிவு நிலையிலும் (CONSCIOUS STATE), ஆழ்ந்த மயக்க நிலையிலும் (SUB-CONSCIOUS STATE) பார்க்கும் ஒவ்வொரு படமும், நம் மூலைக்குள், ஏதோ ஒரு ஓரத்தில் பதிவாகியுள்ளது. நம் மூலையின் தூதுவர்களான, நியூரோ-ட்ரான்ஸ்மிட்டர்ஸ் (NEURO-TRANAMITTERS) துணையோடு, அனைத்து பதிவுகளையும், நிழற்படம்போல் பதிவிறக்கம் செய்யும் கருவிதான் இது என்று அந்தக் கருவியைக் காட்டினேன்.அடுத்த புரட்சி மனதின் இன்னும் பல இரகசியங்களைச் சொல்லக் காத்திருக்கிறது என்ற புன்முறுவலோடு என்னைக் கட்டியணைத்தார் அவர்.

Sunday 19 February 2017

கருத்து வேறுபாடுகளோடு கைகோர்ப்போம்

ஒரு அழகான உறவு முறிய, அமைதியானக் குடும்பங்கள் பிரிய காலங்காலமாக மிகப் பெரிய காரணமாக இருப்பது கருத்து வேறுபாடுகள் தான். ஆனால் நாம் ஆழ்ந்து சிந்தித்தோமேயானால், கருத்து வேறுபாடுகளே மனிதனின் மிகப்பெரிய பலம். எந்த ஒரு உறவிலும், மிகவும் முக்கியமாக, அன்பின் உயிர் நிலையான காதலிலும், உயர் நிலையான வாழ்க்கைத்துணை ஒப்பந்தத்திலும் (திருமணம் என்பதைவிட பெரியார் சொன்ன "வாழ்க்கைத்துணை ஒப்பந்தம்எ" என்பதை என் பகுத்தறிவு எற்றுக்கொள்கிறது) கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், பகுத்தறிவு இதுதான்.ஆறறிவு படைத்த மனித இனத்தின் சக்தியே சிந்திப்பதுதான்.ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் பெற்றிருப்பதால், அவன் சிந்தனையும் தனித்துவம் கொண்டதுதான். ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் அனைத்து விஷயத்திலும் ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.எந்த ஒரு விஷயத்திலும் வேறுபாடுகள் வருவதுதான் இயல்பு. அந்தக் கருத்து வேறுபாடுதான் மனித சிந்தனையின் அடையாளம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் சொல்லப்போனால், மாற்றி யோசிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்க்கைத்துணையாக வந்திருப்பதை விட, மிகவும் சிறந்த விஷயம் என்னவிருக்க முடியும். ஆனால், அந்த சிறந்த விஷயத்தை வாழ்க்கையின் சிறப்பிற்கும், வாழிய நலத்திற்கும், அளவில்லா ஆனந்தத்திற்கும் எப்படி அடித்தளமாகக் கையாள்வது அன்பது கண்வன் - மனையி யான இருவரின் உள்ளத்திலும்தான் உள்ளது. 

எகல் என்ற தத்துவ ஞானி , "ஒவ்வொரு கருத்தும் சூழ்நிலையும், தடையை மீறி அதனதன் எதிர் நிலையோடு இணைந்து ஓர் உயர்ந்த அல்லது மிகுந்த சிக்கல் வாய்ந்த முழுமையானதொரு பொருளாக வடிவம் பெறுகின்றன" என்ற அருமையானத் தத்துவத்தை முன்வைக்கிறார்.  

வாத முறைப்படி ஆய்ந்து உண்மை காணும் இயக்கமே எகலின் தத்துவத்திற்கு அடித்தளமாகும். ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத்துணைகளாக கைகோர்த்தப் பிறகு,  சேர்ந்து செய்ய வேண்டிய பொறுப்புக்கள், எடுக்க வேண்டிய முடிவுகள், தினசரி வாழ்க்கையில் ஆற்றும் பணிகள் என்று பல சூழ் நிலைகளில் கருத்து வேறுபாடுகள் முளைப்பதற்கு வாய்ப்புக்கள் உண்டு. அதுவும், பாரதி கனவு கண்ட "புரட்சிப்பெண்" நனவாகி வரும், இந்தக் காலக்கட்டத்தில் அதுபோன்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உருவாகும். எப்பொழுதெல்லாம் இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் களை கட்டுகிறதோ, அப்பொழுதெல்லாம், அது செம்மையை நோக்கியப் பாதையின் அறிகுறி என்பதை மனதில் கொண்டு,  இருவரும், இருவேறு கருத்துக்களையும் பொறுமையாக உள்வாங்கி, நிதானமாக ஆராய்ந்து, பிறகு இருவரின் மனதிற்கும் ஒத்த, எல்லா வகையிலும் பயனளிக்கக்கூடிய முடிவை எடுத்தால் குடும்பத்தில்  மகிழ்ச்சி மட்டுமல்ல, செழிப்பும் பெருகும். அதற்கு முதற்படி, இருவருமே, தனது  கருத்துத் தான் எப்பொழுதும் நல்ல கருத்து, தன் முடிவு மட்டும் தான் பயனளிக்கும் என்ற கருத்தை தூக்கி எறிய வேண்டும். அப்படி ஒரு கொள்கை. மனிதனின் அடையாளமான பகுத்தறிவையேக் கேள்விக்குறி ஆக்கிவிடும். ஒரு மனிதனின் கருத்து தனது சிந்தனையின் வெளிப்பாடு. அவ்வளவுதான். கருத்துக்களை கருத்துக்களாக மட்டும் பார்க்க வேண்டும்.சரியானது , தவறானது என்று பிரிக்கக்கூடாது. இரண்டு கருத்துக்களையும் உள்வாங்கி சூழ்நிலைக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும், நல்ல முடிவு என்பதை விட, ஏற்ற முடிவு எடுப்பதுதான் மனிதனின் பகுத்தறிவு,  ஆனந்தமான வாழ்க்கைக்குக் காட்டும் வழியாகும்.

Sunday 6 November 2016

indru...24x60x60: வேற்றுமை ரசிக்கும் மனிதனே அழகு....!!

indru...24x60x60: வேற்றுமை ரசிக்கும் மனிதனே அழகு....!!: கறுப்பு அழகு....வெள்ளை அழகு... கறுப்பில் தூங்கும் வெள்ளை அழகு... வெள்ளையில் ஒளியும் கறுப்பு அழகு...!! பொறுமை அழகு...கோபம் அழகு... பொ...

வேற்றுமை ரசிக்கும் மனிதனே அழகு....!!

கறுப்பு அழகு....வெள்ளை அழகு...
கறுப்பில் தூங்கும் வெள்ளை அழகு...
வெள்ளையில் ஒளியும் கறுப்பு அழகு...!!
பொறுமை அழகு...கோபம் அழகு...
பொறுமை வழங்கும் வாழ்க்கை அழகு...
கோபம் அளிக்கும் வெற்றி அழகு...!!!
நிறங்கள் அழகு..குணங்கள் அழகு...
நிறங்கள் பேசும் குணங்கள் அழகு...
குணங்களில் பல நிறங்கள் அழகு...!!
பெண்ணும் அழகு...ஆணும் அழகு...
பெண்ணுள் ஆணாய், ஆணுள் பெண்ணாய்
பூமியில் மலரும் பூக்கள் அழகு...!!!
நீயும் அழகு..நானும் அழகு...
எனக்குள் யாசிக்கும் நீயும் அழகு..
உனக்குள் சுவாசிக்கும் நானும் அழகு..!!
மனிதன் அழகு..வேற்றுமை அழகு..
மனிதனின் அடையாளம் வேற்றுமை அழகு
வேற்றுமை ரசிக்கும் மனிதனே அழகு....!!
உலகம் அழகு...உயிர்கள் அழகு...
உயிருள்ள மனதிற்கு  உலகம் அழகு
உலகமுயிர் ஒன்றுதான் உண்மை அழகு....!!!!

Saturday 14 November 2015

நிறுத்தம் - 6 கரம்பிடிக்க வருவாயோ

இரவு நேர தூக்கங்கள்
இல்லாமல் போகிறதே..
இருள்கூறும் மௌனத்தில்
இசையொன்று கேட்கிறதே...

காதலியே உன் சொற்கள்
கடலோர கவிதையாக
கவிபாடி கலந்தாடி-என்
கல் நெஞ்சைக் கரைக்கிறதே..

கணவாளன உள்ளத்தை
களவாடிச் சென்றாயே..
காதலியே நீஎந்தன்
கண்முன்னே மறைந்தாயே...

மடியினிலே மழலையாக -என்னை
முத்தமிட வருவாயோ..
கண்மணியே நான் காத்திருப்பேன்
கரம்பிடிக்க வருவாயோ...!!

iravunera thookkangal
illaamal pogirathe..
irulkoorum mounathil
isaiyondru ketkirathe..
kaadhaliye un sorkal
kadalora kavithaiyaaga
kavipaadi kalanthaadi-en
kalnenjai karaikirathe..
kanavaalan ullathai
kalavaadi sendraaye
kaadhaliye nee enthan
kanmunne marainthaaye
madiyinil mazhailaiyaaga - ennai
muththamida varuvaayo
kanmaniye naan kaaththiruppen
karambidikka varuvaayo..


Thursday 29 October 2015

நிறுத்தம் 5 - எத்தனை மனிதர்கள்..அத்தனை முகங்கள்..

                            
                                         சமுதாயம் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு....ஒவ்வொரு மனிதரின் வாழ்வின் தேவைகளைப் பூர்த்திசெய்ய எல்லோரும் சேர்ந்து உழைத்து வாழ்வது தானே சமுதாயம்..ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சில தனித்தன்மைகள் உண்டு..அவர்கள் பேசும் மொழி, பழகும் முறை , வாழும் கோட்பாடுகள்  என அடுக்கிக்கொண்டேப் போகலாம்...பல தலைமுறைகளின் பதிவாகத் தொடர்ந்து வரும் சில வாழ்க்கை முறைகள் அந்த குறிப்பட்ட சமுதாயத்தினரை அடையாளமாக காட்டப்படுகிறது....தமிழனா ..இவன் இப்படித்தான்...தெலுங்கனா இவன் இப்படித்தான்....பீகார்காரனா இவன் இப்படித்தான்...என நம் மனதில் ஏற்கனவே இருந்து வரும் எண்ணங்களால் நாம் எடுக்கும் முடிவு எந்த விஷயத்திலும்  நிலைகுறைந்து போக வாய்ப்புகள் உண்டு..ஏனென்றால் , ஒவ்வொரு மனிதனும் அதிசயம்தான்..அவன் எப்பொழுது மாறுவான் , என்ன நினைப்பான் என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும்.....அதனால் , நாம் வேலை செய்யும் இடமாக இருக்கட்டும் , நம் உறவுகளாக இருக்கட்டும் , நட்பாக இருக்கட்டும் , அனைத்திலும் "எத்தனை மனிதர்கள்..அத்தனை முகங்கள்..." என்ற பரந்த மனத்தோடு பயணம் செய்தால் , நம் முடிவுகள் நியாயமாகவும் சரியாகவும்  இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன்..ஒவ்வொரு சமுதாயமும் இப்படித்தான் என்பதைத் தாண்டி ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் என்ற கட்டவிழ்ந்த மனத்தோடு ஒவ்வொரு சவாலையும் சந்திக்க வேண்டும்...ஒருவனைப்பற்றியோ , ஒரு நபர் சம்பந்தப்பட்ட விஷயத்தைப்ப்ற்றி முடிவெடுக்கும்பொழுது  , அவனைப்பற்றி , அவனுடைய மன சூழ்நிலையைப்பற்றி, அவன் குடும்ப சூழ்நிலையைப்பற்றி , அவனுடைய ஏக்கங்களைப்பற்றி , ஏமாற்றங்களைப்பற்றி முழுதாக புரிந்து கொண்டபிறகே , நாம் நம் முடிவை எடுக்க வேண்டும்...அப்பொழுது ஆராயும் பொழுது தான் மனிதனின் மனம் எவ்வளவு அதிசயமானது என்பதை உணர்வோம்..







Saturday 1 August 2015

நிறுத்தம் 4 - கலாம் தாத்தா.....உங்களைப் பார்க்கணுமே.... - (1)


      என் கனவுத் தாத்தாவே,

                
                         எங்கு சென்றீர்கள்..? ஓய்வு  பெற்றுவிட்டீர்களா..வாழ்க்கையிலிருந்து? கண்டிப்பாக இருக்கமுடியாது.....இயற்கை அப்படியொரு  விருப்பத்தை உங்களிடம் கேட்டிருந்தால் , நீங்கள்  கண்டிப்பாக ஒய்வுபெற மறுத்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்..... நீங்கள் திடீரென்று என்னை விட்டுச்சென்றதற்கு காரணம்  தேடி அலைந்த என் ய்மனதிற்கு , பழைய நினைவலைகள் விடையைக் கொடுத்தது....

"புரட்சி என்பது உன்னைப்போன்ற மாணவர்கள் கையில்தான் இருக்கிறது...மாணவன் கனவு கண்டால் எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது..." 

என்று நீங்கள் சொன்னதை நிரூபிக்க உங்கள் அன்புக்கட்டளையாகத்தான் என்னைத் தவிக்கவிட்டு நீங்கள் சென்றதின் நோக்கமாக நினைக்கின்றேன்...உலகம்  பாராட்டிய அறிவுச்செம்மலை, நம் தாய்த்திரு நாடே காதலித்த இரும்புமனிதரை , என்னைப் பெற்றெடுத்த என் தமிழ்மண்ணின் மைந்தன் என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் நரம்புகளில் " சங்கே முழங்கு " என்ற தமிழ்ச்சத்தம் கர்ஜிக்கிறது.....வறுமையின் நிறத்தை மாற்றவும் , கல்வியின் கரத்தை இறுக்கமாகப் பிடிக்கவும் , நீங்கள் செய்தித்தாள் விற்று 
"நேற்றய இந்தியா" அனைவரின் வீட்டிலின் வாசலிலும்  சேர்க்க முயன்றதை நினைத்து நெஞ்சம் நிமிர்கிறேன்...வறுமையிலும் எவ்வளவு செழுமை...... ராமநாதபுரம் ஸ்வர்ட்ச் பள்ளி , திருச்சி செயின்ட் ஜோசஃப்  கல்லூரி ,  எம்.ஐ.டி ( மெட்ராஸ் தொழில் நுட்ப நிலையம் )  என்று உங்களின் அறிவைத் தாலாட்டி , சீராட்டி , எழுச்சிக்கல்வி கொடுத்து உங்களை ஒரு "அறிவுச் சிற்பமாக" செதுக்கிய  கல்விக்கூடங்களை  "அறிவுச்சிற்பக்கூடமாகத்தான்" என் மனது ஏற்கிறது....அதோடு மட்டுமல்லாமல் ,  என் வாழ்க்கையில் வாழ வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த மூன்று இடங்களும் கண்டிப்பாக உண்டு..பார்க்க வேண்டிய இடங்கள் அல்ல , வாழ வேண்டிய இடங்கள்....ஆம்...நீங்கள் உட்கார்ந்த வகுப்பறை , நீங்கள் தங்கிய அறை, நீங்கள் உணவருந்திய இடங்கள் ,  உங்களிடம் பேசிப்பழகிய பாக்கியவான்கள் , உங்கள் காலடி பெற்று "அறிவெழுச்சி" பெற்ற ஓர் இடம் விடாமல் , உங்களிடம் சம்பந்தப்பட்ட அனைத்திலும் என் உடம்பும் ,  உள்ளமும் , மனமும் , அறிவும் ஒன்றாகக்கலந்து  அந்தக் கல்விக்காற்றைப் பெற வேண்டும் என்பதே என் உடம்பை இயக்கும்  ஒவ்வொரு அணுக்களும் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணம்  என்பதில் நான் பெருமைப்படுகிறேன்....உங்களுக்கு நான் எழுதும் இந்தக் கடிதத்தில் நீங்கள் என்னைப் பிரிந்த மன வலியோடு சேர்த்து , நீங்கள் புகட்டிய மன வலிமையோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்தை உங்களோடு பயணிக்க விரும்புகிறேன்....உங்களுக்கும் பயணம் என்றால் மிகவும் பிடிக்குமல்லவா..?